Thursday, March 18, 2010

வாழுகின்ற சீதைகளுக்காக...

"கிருஷ்ணா- வாழ்க்கையே ஒரு திருவிழா" என்கிற ஓஷோவின் புத்தகத்தை வாசித்து புரிந்து கொள்ள முயன்றபோது போது உருவான ஆக்கம் இது! 
  
"இராமன் எத்தனை இராமனடி -அவன் 
நல்லவர் வணங்கும் தேவனடி "     
இராமன் என்கிறபோதே நம்மை அறியாமலே ஒரு புனிதமான ஆண் என்கிற ஒரு உள்ளுணர்வு உருவாகிறதல்லவா?  நம்மில் அனேகர் இந்த இராமனாகவே வாழ்ந்துவிட விரும்புகிறோம். அதையே நாம் வாழ்கிற சமுதாயமும் விரும்புகிறது. இது எந்தளவிற்கு சாத்தியமாகிறது? எப்படி சாத்தியமாக்க முடியும்? 
"எல்லா முன்னோடிகளையும் ஜோசியுங்கள். ஆனால் யாரையும் பின்பற்றாதீர்கள். ஒரே ஒருவரை மட்டும் நீங்கள் பின்பற்றலாம். அது நீங்கள் தான்"என்கிறார் ஓஷோ. என்னை நான் எப்படி பின்பற்றுவது? ஒருவரை பின்பற்ற வேண்டுமாயின் அவர் எனக்கு முன் சென்றிருக்க வேண்டுமல்லவா? என்னை நான் பின்பற்றுவதற்குரிய பாதையில் தான் நான் இருக்கிறேனா என்று தெரியாதே!!! அப்போ என்னை நானே  எப்படி பின்பற்றுவது? நம்மை நாமே பின்பற்றுவது என்பது ஓஷோ போன்றவர்களுக்கே முடியும். அவர்கள் பாரதத்தில் அருச்சுன இயல்புகளையும், ராமாயணத்தில் விபீஷண இயல்புகளையும் நெருங்கி   சற்று முன்னோ பின்னோ இருப்பவர்கள். ஆனால் நாம்  துரியோதன, ராவண இயல்புகளுக்கு முன்னோ பின்னோ இருப்பவர்கள்.  நம் போன்றவர்களுக்கு அதை புரிந்து கொள்வதும் சாத்தியப்படுவதும் வேறோர் சரியான பின்பற்றுதல் இன்றிக்  கடினமே! இல்லா விட்டால் பின்னர் அது ஆப்பிழுத்த குரங்கின் கதையாகவும் முடியலாம் (நான் பிளாக்கர் இல் எழுத தொடங்கியது போல)  "வேறு யாரையாவது நீங்கள் பின் பற்றுகிறீர்கள் என்றால்  உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கிறீர்கள்" என்பது ஓஷோவின் கருத்து. அவர்  தன்  முதிர்ந்த    பக்குவப்பட்ட  அறிவினால்   இராமனையும்,  கண்ணனையும்  எல்லா  அவதாரங்களையும்  மனிதனாகவே  பார்ப்பதால் அவர்களைக் கூட பின்பற்றுவது சரியல்ல என்பதே அவரது கருத்தாகிறது.   ஆனால் நாம் அவரளவுக்கு பக்குவப்பட்டவர்கள் அல்லவே. நம்மைப் பொறுத்தவரைக்கும் இராமனும் கண்ணனும் கடவுளே! இந்த உணர்வை மாற்றுவது மிக மிகக் கடினம். நாம் இறைவனின் படைப்பின் இயல்புத் தன்மையில் இருந்து வெகு காலமாக வெகுவாக மாறிவிட்டோம் என்பதை அவர் உணர்ந்தும் உள்ளார்.   எனவே மீண்டும் நாம் ஆரம்ப நிலைக்கு செல்லவும் நாம் நீண்ட தூரம் பயணித்தே ஆக வேண்டும் என்பதில் எதிர் கருத்து இருக்க முடியாது.     ஒரு துளி பால் விஷத்தைப் பாலாக்குமா? கொஞ்சம் விஷத்தின் செறிவை குறைக்க மட்டுமே முடியும். ஓஷோ போன்ற சிந்தனையாளர்களின் சில  பால்  துளிகளால்  மட்டும் விஷமாகிப்போன சமுதாயம் மாறிவிடாது.  நாமும் எம் பங்கிற்கு சில நீர்த் துளிகளை சேர்த்தால் மட்டுமே விஷங்களை முறிப்பதற்கு அந்தப் பால்த் துளிகளுக்கு உதவலாம். 
சரி, நாம் மனிதனை பின்பற்றுகிற போதுதானே நம்மை நாம் தாழ்த்துவதாகும். கடவுளை பின்பற்றும் போதல்ல. ஒன்றை வேறொன்றுடன் ஒப்பிடும் போதுதான் அந்த ஒன்றோ மற்ற ஒன்றோ தாழ்ந்து விடப்போகிறது. கடவுளுடன் ஒப்பிடப்படக் கூடியவர்கள் நாமில்லையே.  ஆகவே நாம் கடவுளை பின்பற்ற முடிவு எடுத்துகொண்டு மேலும் தொடர்வோம். கடவுளின்  பெயரால்  அநியாயங்கள்  நிகழ்வதென்னவோ  உண்மைதான் ,  ஆனால் நாம் ஒவ்வொருவரும் கடவுளை மனப்பூர்வமாக நம்பி அவருக்கு உண்மையாக இருக்கிற போது கடவுளின் பெயரால் ஏமாற்றுபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டியதில்லையே. ஏமாறுபவர்கள் இருக்கிற வரைதான் ஏமாற்றுபவர்கள் இருக்க போகிறார்கள். கடவுள் நம்பிக்கை என்பது வேறு,  விழிப்புணர்வு எனபது வேறு இல்லையா? ஆகவே இராமனாய் இருப்பதற்கு முதலில் நாம் இராமனின் பாதையில் தொடர்வோம். 
ஆனால் ஓஷோவின் கருத்து மறுக்கப்பட முடியாதது, எதோ ஒரு கட்டத்திலாவது நாம் அவரது கருத்தைப் பின்பற்றியே ஆக வேண்டும்.  ஆகவே இராமனின் பாதையில் தொடர்கிற போதே நிதானமாக அந்தப் பாதையைக் கவனிப்போம். நாம் தெரிந்து வைத்திருக்கிற மற்றவர்களின் பாதைகளையும் சற்றே  உற்று நோக்குவோம். இப்போது எமக்குள் இருக்கிற இராம, கிருஷ்ண, இராவண, துரியோதன இயல்புகளை சரியாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இப்போது எமக்கான பாதையை நம்மால் ஓரளவிற்காவது இனம் காணக் கூடியதாக இருக்கும். இப்போ எங்கள் பாதையில் பயணிக்க ஆரம்பிக்கலாம். முதலில் எங்கள் பாதையை  இனம் கண்டு பிறகு அந்தப் பாதையில்  நம்மை நாம் பின்பற்றுவதையே ஓஷோ எல்லா  முன்னோடிகளையும் ஜோசி ஆனால் உன்னை நீ பின் பற்று என்று சொல்லியிருக்கிறார்! 
ஆனால் "கண்ணனை போன்ற ஒருவர் நம்மிடையே திகழும் போது அவன் பல லட்சக் கணக்கான ஆண் பெண்களின் சாராம்சம் தான்" என்பது ஓஷோவின் கருத்து.  இது இராமனுக்கும் பொருந்தும், சீதைக்கும் பொருந்தும். ஓஷோ சொல்கிற கருத்துப்படி பார்த்தால் நாம் எல்லோருமே குறித்த சில  இராம இயல்புகளை மாத்திரம் கொண்டிருந்தால் மீதி  இராம இயல்புகள் எம்மிடம் இருந்து தவறிவிடும் அல்லவா? ஏகபத்தினி விரதனாகவும் இருக்க வேண்டும்! தாய் சொல்லை தட்டாமலும் இருக்க வேண்டும். அதே நேரம் சகோதர பாசமுள்ளவனாக இருக்க வேண்டும். அது போலவே கல்வி கேள்விகளில் சிறந்தவனாக வேண்டும் இல்லையா? வீரமுள்ள ஆணாக இருக்க வேண்டும் இல்லையா? ஒன்றிருந்து ஒன்று இல்லாமல் போனாலும் பிரஜோசனமில்லையே என்றொரு குழப்பம் வந்து விடுகிறதல்லவா! இது போலவே ஒருவரது ஜாதகத்தை போல இன்னொருவரது ஜாதகம் அமைய ஒரு யுகம் தேவை  என்கிறது ஜோதிடம் . ஒரு யுகத்தில் ஆயிரம் பில்லியன் ஜாதகங்களை எழுத முடியுமாம். ஆனால் உலக சனத் தொகையோ அதனுடன் ஒப்பிடும் போது மிக மிக குறைவு.  ஆகவே ஒருவரைப் போல் இன்னொருவர் ஒரு யுகத்தில் இல்லை என்றாகி விடுகிறது. ஆக பூரண இராமனாக இருப்பது இங்கே யாருக்கும் சாத்தியமில்லை. இராமானால் மட்டுமே பூரண இராமனாக இருக்க முடியும். அப்போ இராமனாகவே வாழ்கிற நம் ஆசை என்னாவது ?      
"சீதை  மடியில் இராமன் இருந்தான்- அவன் 
வேறு பெண்ணை நெஞ்சில் காண மறந்தான்"      
ஆம் உண்மை என்னவென்றால் இராமன் என்றவுடன்  நமக்கு நினைவிற்கு வருவது  அவனது ஏகபத்தினி விரதம் மட்டும் தான். அதனால்த்தான் அவனுக்கு பெருமையும் கூட. இந்த இயல்பைத்தான் நாம் விரும்புகிறோம். அதனால்த்தான் இராமனாக இருக்க விரும்புகிறோம்.
"ராதை மடியில் கண்ணன் இருந்தான் -அவன்  
வேறு பெண்ணை நெஞ்சில் நினைத்திருந்தான்" 
என்றபோதும்  ஓஷோ கண்ணனில் குறை ஏதும் இல்லை என்றே கூறுகிறார். சில சமயங்களில் இராமனை விட கண்ணனை சிறப்பாகவும் குறிப்பிடுகிறார். (அதற்கு புத்தகத்தில் நிறைய காரணங்கள்  கூறப்பட்டுள்ளன)  அப்போ இராமனாக இருக்க விரும்புவது வீணானதா? இல்லை.    
"சீதை  மடியில் இராமன் இருந்தான்- அவன்  
வேறு பெண்ணை நெஞ்சில் நினைத்திருந்தான்"    
என்றில்லாமல்; இருந்தால் பூரணமான இராமனாகவோ அல்லது பூரணமான கண்ணனாகவோ இருக்க வேண்டும் என்றே அவர் எதிர்  பார்க்கிறார். கண்ணன்; தான் கண்ணனாகவே இருந்தான், இராமன்; தான் இராமனாகவே இருந்தான், அது போலவே நீங்கள் நீங்களாகவே இருங்கள், அல்லது பூரணமாகவே இராமனாகி விடுங்கள் என்கிறார்.  இங்கே நமது  பிரச்சனை என்னவென்றால் நாம் இராமனாக இருக்க விரும்புகிறோம் என்பதே!   
"There is a different between interest and commitment 
when you are interested in doing something 
you do it only when it is convenient. 
when you are committed to something 
you accept no excuses, only results."    
எனவே இராமனாக வாழ விரும்புவதை விட, சீதைகளை நாம் தேடுவதால் இராமன்களாக வாழ்வதற்கு மனப்பூர்வமாக முயற்சி செய்வதே சிறந்தது. "நாம் எதுவாக வாழ முயற்சிக்கிறோமோ அதுவாகவே மாறிவிட முடியும்" என்பது சுவாமி விவேகானந்தரின் கருத்து.  அப்போ சீதைகள் வேண்டாம் என்பவர்கள் ????  
தவறிப் போயும் சீதைகளுக்கு இராமன்கள் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பதற்காகவாவது இராமன்களாக முற்சிபோம்!
 

No comments:

Post a Comment